ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களிடம் விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தின் காரணமாக தமிழகத்தில் தற்கொலை சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை தடை செய்ய அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். தமிழக அரசு இதனை தடை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே இந்த ஆன்லைன் ரம்மி தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு விவதாங்கள் நடைபெற்றது. அது தொடர்பான ஆலோசனைகளும் நடைபெற்றது. இந்த நிலையில் தான் தற்போது நடவடிக்கை என்பது தமிழக காவல்துறையால் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி 6 நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.
அதாவது ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் விளையாடிய விளையாட்டை நடத்தும் நிறுவனங்களுக்கு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ட்ரீம் 11, ரம்மி, ஜங்லி ரம்மி, பப்ஜி, லுடோ உள்ளிட்ட 6 நிறுவனங்களுக்கு விளக்கம் கேட்டு சிபிசிஐடி நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழ்நாட்டில் உயிரிழந்தவர்கள் தொடர்பாக 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 17 வழக்குகளையும் சிபிசிஐடி விசாரிக்க தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டிருந்தார்.
டிஜிபி உத்தரவை அடுத்து ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்தவர்கள் குறித்து நடவடிக்கையை தொடங்கியது சிபிசிஐடி. 6 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இந்த விளக்கத்தை அடிப்படையாக வைத்து அடுத்த கட்ட விசாரணை தீவிரமாக நடைபெறும் எனவும் தமிழ்நாடு காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.