தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு தலைமையில் இன்று 4 மாவட்ட காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 2.O குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களை கைது செய்வது, குட்கா மற்றும் போதைப் பொருள்களை ஒழிப்பது, போதைக்கு அடிமையான மாணவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு நடவடிக்கை எடுப்பது, ரவுடி மற்றும் சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடந்தது.
அதோடு மட்டுமில்லாமல் அந்தந்த பகுதி காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளர்கள் பொது மக்களுடன் ஒன்றிணைந்து வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சாலை விதிமுறைகளை கடைபிடிப்பது, சாலை விபத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பது, சைபர் குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு வழங்குவது, காவலர்கள் மீதான குற்றங்களை அவ்வப்போது கேட்டறிந்து உடனுக்குடன் நிவர்த்தி செய்து வாராந்திர ஓய்வு வழங்குவது, குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களை முற்றிலும் ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஏராளமான காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.