Categories
மாநில செய்திகள்

“டிஜே பார்ட்டியில் பெண்களுக்கு இலவச மது” திமுகவினருக்கு தொடர்பு இருக்கிறதா….? திருப்பூர் மேயர் திடீர் விளக்கம்….!!!!

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மங்களம் ரோட்டில் டுவின் பெல்ஸ் என்ற தனியார் விடுதி அமைந்துள்ளது. இந்த விடுதியின் சார்பாக ஒரு விளம்பர நோட்டீஸ் வெளியானது. அதில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை நடைபெறும் டிஜே பார்ட்டியில் பெண்களுக்கும், தம்பதியாக வருபவர்களுக்கும் இலவசமாக மது வழங்கப்படும் என குறிப்பிட்டு இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் ஹோட்டல் தரப்பினர் அந்த நிகழ்ச்சியை ரத்து செய்ததுடன், எங்களிடம் பரிசீலனை செய்யாமல் விளம்பர பிரிவு அப்படி ஒரு விளம்பரத்தை செய்துள்ளதாகவும் கூறி மன்னிப்பு கேட்டனர். அதோடு இதுபோன்ற நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது எனவும், எதிர்காலத்திலும் அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறாது எனவும் ஹோட்டல் நிர்வாகத்தினர் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்துள்ளனர். அதில் சமூக சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையிலும் பெண்களை மதுவுக்கு அடிமையாக்கி, அதன் மூலம் பணம் சம்பாதிக்கும் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாஜக உட்பட பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பினரும் சம்பந்தப்பட்ட ஹோட்டல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கொடுத்தனர். கடந்த ஜூலை மாதம் அந்த தனியார் ஹோட்டலின் திறப்பு விழா நடைபெற்ற போது அதில் மேயர் உட்பட திமுக கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர்.

அந்த தனியார் ஹோட்டல் திருச்சி அமைச்சர் ஒருவரின் நெருங்கிய சொந்தக்காரர் ஒருவருக்கு சொந்தமானது எனவும், திமுக புள்ளிகள் பலருக்கும் அந்த ஹோட்டலுடன் தொடர்பு இருக்கிறது எனவும் இணையதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவியது. இந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருப்பூர் மேயர் தினேஷ்குமார் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் டுவின் பெல்ஸ் என்ற தனியார் நிறுவனத்தின் திறப்பு விழாவுக்கு அழைப்பு வந்த போது நான் உட்பட திமுகவினர் சென்றோம். அந்த தனியார் ஹோட்டலில் நடக்கும் நிகழ்ச்சிகளுக்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.

அந்த நிறுவனத்தின் டிஜே பொழுதுபோக்கு நிகழ்ச்சி மற்றும் பெண்களுக்கு இலவச மதுபானம் போன்ற நடவடிக்கைகளை நான் வன்மையாக கண்டிக்கிறேன். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நான் மாநகர காவல் ஆணையருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளேன். அரசியல் உள்நோக்கத்தோடு எதிர்க்கட்சிகள் விஷம செய்திகளை பரப்பி வருகின்றனர். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் மாநகராட்சியின் மேயராகிய நானும், தமிழக முதல்வர் ஸ்டாலினும் இதுபோன்ற கலாச்சார சமூக சீரழிவு குற்றங்களுக்கு என்றைக்கும் துணை போக மாட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |