அதிமுக சார்பில் தமிழக டிஜிபியிடம் மீண்டும் புகார் கொடுப்பதற்காக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட அமைச்சர்களும், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட நிர்வாகிகள் டிஜிபி திரிபாதியை சந்தித்து மனு கொடுத்தனர். பின்னர் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பேசிய அமைச்சர் சி.வி சண்முகம் கூறுகையில்,
சசிகலா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியுடன் பொதுச் செயலாளர் என்ற முறையில் சென்னைக்கு வருவார் என்று பேட்டி டிடிவி தினகரன் பேட்டி கொடுக்கிறார். டிஜிபியிடம் மனு கொடுத்தாலும் சரி, முப்படை தளபதிகளிடம் மனு கொடுத்தாலும் சரி, எங்களை தடுக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் நேற்று பெங்களூரில் தினகரன் – சசிகலா அவர்களுடைய ஆட்கள், நாங்கள் 100 பேர் மனித வெடிகுண்டுகளாக மாறி தமிழகத்திற்கு வருவோம் என்று மிகப்பெரிய ஒரு அச்சுறுத்தலை, கொலை மிரட்டலை பேட்டியாக கொடுத்துள்ளார்கள்.
தமிழகத்தினுடைய அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில், பொது மக்களின் உயிருக்கும், பொதுமக்களுடன் சொத்துக்கும் சேதம் விளைவிக்கும் வகையில், மக்களிடையே விரோதத்தை உருவாக்கி, கலவரத்தை தூண்டுகின்ற வகையில் சசிகலா – டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் சதித் திட்டத்தை தீட்டி இருக்கிறார்கள். இதனால் தான் தினகரன் இப்படி பேட்டி அளித்திருக்கிறார். தினகரனை சார்ந்தவர்கள் மனித வெடிகுண்டாக மாறி தமிழகத்திற்கு நுழைவோம் என்று சொல்லியிருக்கிறார்கள் இதனை தடுக்க வேண்டும் என டிஜிபியிடம் வலியுறுத்தியுள்ளோம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு படி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் இருக்கின்ற இயக்கம். இது தான் உண்மையான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். அவர்களுக்கு தான் இரட்டை இலை சொந்தம்.
நான்கு ஆண்டுகாலம் இந்த அரசு அம்மாவின் வழியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டு இருக்கின்றது. நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து இருக்கிறது. உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கிறோம். இரண்டு இடைத்தேர்தலிலும் சந்தித்து வெற்றி பெற்றுள்ளோம் எனவே அதிமுகவை யாரும் உரிமை கொண்டாட முந்தியது. அது முதல்வர், துணை முதல்வர், அவை தலைவருக்கு சொந்தம் என அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்தார்.