டிப்பர் லாரி மீது கண்டெய்னர் லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலிருந்து சிமெண்ட் லோடு ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி அரூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதேபோன்று அரூரில் இருந்து சேலம் நோக்கி கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் மஞ்சவாடி கணவாய் அருகே சென்ற போது பிரேக் பிடிக்காததால் கண்டெய்னர் லாரி சாலையில் தாறுமாறாக ஓடி எதிரே வந்த டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதி கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் டிப்பர் லாரி ஓட்டுநர் இளங்கோ(45) அவருடன் இருந்த பழனி (40) ஆகிய இரண்டு பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்த அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். பிறகு இறந்தவர்களின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.