அமெரிக்க நாட்டின் ப்ளெய்ன் (Blaine) அருகில் நெடுஞ்சாலையில் டிரக்கும், காரும் மோதி பெரும் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் ஏப்ரல் 11, 2022 அன்று மதியம் 2:30 மணி அளவில் நடைபெற்றது. இச்சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில் ஒரு வெள்ளை நிற கார் வளைவில் கட்டுப்பாட்டை இழந்து நேரடியாக டிரக் வந்து கொண்டிருக்கும் நெடுஞ்சாலைக்குள் நுழைவதை வீடியோ காட்டுகிறது. இதையடுத்து கார், டிரக் மீது மோதுகிறது. இதன் காரணமாக டிரக்டிரைவர் நெடுஞ்சாலையின் பக்கச் சுவரில் மோதி கிட்டத்தட்ட விளிம்பிற்கு சென்று நின்றது.
எனினும் டிரக் கீழேயுள்ள சாலையில் விழாமல் நின்றது. அதன்பின் டிரக் தீப்பிடித்து எரிந்த நிலையில், நெருப்புக்கும் கரும்புகைக்கும் மத்தியில் அதன் ஓட்டுநர் எப்படியோ கதவைத் திறந்து வெளியே குதித்து அங்கிருந்து தப்பிவிட்டார். அவர் இறங்கிய பின் டிரக் இன்னும் வேகமாக பற்றி எரிந்தது. இதுகுறித்து தகவல்களின்படி சம்பவம் நடந்த நெடுஞ்சாலையில் போக்குவரத்து சுமார் 2 மணி நேரம் மூடப்பட்டது. இதனிடையில் கார் ஓட்டுநர் மதுபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது. டிரக் மற்றும் கார் ஓட்டுநர்கள் இருவருமே இவ்விபத்தில் காயமடைந்ததாகவும், பின் இருவரும் சிகிச்சை பெற்றதாகவும் போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.