இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் தேவாரம் பகுதியில் உள்ள மல்லிங்கர் கோவில் தெருவில் அலெக்சாண்டர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது தந்தை மூக்கையா மேட்டுப்பட்டியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரவுநேர காவலாளியாக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் அலெக்சாண்டர் தனது தந்தைக்கு தினமும் இரவு சாப்பாடு கொண்டு சென்று கொடுத்து வருவது வழக்கம். அதன்படி அலெக்சாண்டர் இருசக்கர வாகனத்தில் தனது தந்தைக்கு சாப்பாடு கொடுத்துவிட்டு மீண்டும் மேட்டுப்பட்டியில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
அப்போது பத்திரப்பதிவு அலுவலக சாலை அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அலெக்சாண்டரை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அலெக்சாண்டர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த தேவாரம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.