வழிப்பறியில் ஈடுபட்ட மூன்று வாலிபர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூரில் லாரி ஓட்டுனரான ஜானகிராமன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை வெள்ளகேட் பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் பழுதை நீக்கியுள்ளார். அப்போது திடீரென வந்த மூன்று வாலிபர்கள் பட்டா கத்தியை வைத்து மிரட்டி ஜானகிராமனிடம் இருந்த 2500 ரூபாய் பணம், 20,000 ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை பறித்து சென்றனர். அப்போது வழிப்பறி செய்த வாலிபர் ஒருவர் செல்போன் கீழே விழுந்ததை கவனிக்காமல் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த செல்போனை கைப்பற்றியுள்ளனர்.
பின்னர் தப்பி ஓடிய வாலிபர்களின் செல்போன்களை டிராக் செய்து 3 பேரும் பல்லூர் பகுதியில் இருக்கும் பாலாற்று படுகையில் பதுங்கியிருப்பதை கண்டுபிடித்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று மூன்று பேரையும் பிடிக்க முயற்சி செய்தனர். அப்போது அங்கிருந்து தப்பி ஓட முயன்ற வாலிபர்களை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் சினிமா பட பாணியில் போலீசார் துரத்தி சென்று கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் மணிகண்டன், கார்த்திக், அர்ஜுனன் என்பது தெரியவந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் அவர்களிடம் இருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.