திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பூதேரி புல்லவாக்கம் கிராமத்தில் வசிக்கும் 30 கூலித் தொழிலாளர்கள் வளவனூர் கிராமத்திற்கு நெல் நடவு வேலைக்காக சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து ஒரு வேனில் ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அந்த வேனை பிரகாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் வளவனூர் கூட்ரோடு அருகே சென்ற போது திடீரென பிரகாஷுக்கு வலிப்பு ஏற்பட்டது.
இதனால் கட்டுப்பாட்டை இழந்த வேன் நிலைதடுமாறி சாலையோரம் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் 25 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.