திருப்பூர் மாவட்டத்தில் டிரைவிங் லைசன்ஸ் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள் தொடர்பாக பல்வேறு புகார்கள் வட்டார போக்குவரத்து துறை அலுவலகங்களுக்கு வந்துள்ளது.இதனைத் தொடர்ந்து போக்குவரத்து துறை கமிஷனர் தரப்பில் கடந்த செப்டம்பர் மாதம் இது தொடர்பான சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. அந்த சுற்றறிக்கையில்,பொதுமக்கள் மூலம் இருந்து பெறப்படும் நேரடி விண்ணப்பங்களுக்கு லைசன்ஸ் தாமதமாகவும் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு லைசென்ஸ் வேகமாகவும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
அதனால் அரசு வாரத்தின் திங்கள்,வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய மூன்று நாட்கள் பொது மக்களிடம் இருந்து பெறப்படும் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் எனவும் செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளி மூலம் வரும் விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. தற்போது ஒரு மாதம் செயலில் இருந்த இந்த நடைமுறை திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது திங்கள் மற்றும் வெள்ளி என இரண்டு தினங்கள் மட்டுமே பொதுமக்களிடமிருந்து நேரடி விண்ணப்பங்கள் பெற்று தேர்வு நடத்த வேண்டும் எனவும் செவ்வாய்,புதன் மற்றும் வியாழன் ஆகிய மூன்று நாட்கள் ஓட்டுனர் பயிற்சி பள்ளி விண்ணப்பங்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் எனவும் அரசு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திடீர் மாற்றம் பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.