சிறுவன் ஒருவர் டிவி பார்த்துக்கொண்டிருந்த பொது தெரியாமல் கோலிக்குண்டு விழுங்கிய சம்பவத்தால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த 5 வயது சிறுவன் ஒருவர் வீட்டில் தனது 12 வயது சகோதரியுடன் தனியாக இருந்துள்ளார். அவர்களது பெற்றோர் இரண்டு குழந்தைகளையும் தனியாக வீட்டில் விட்டுவிட்டு வேலைக்கு சென்று விட்டனர். இந்நிலையில் சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்வத்தில் தனக்கு பக்கத்தில் இருந்த சிறிய கோலிக்குண்டுகளை எடுத்து விழுங்கியுள்ளார். இந்நிலையில் சிறிது நேரம் கழித்து பெற்றோர் வீட்டிற்கு வந்தபோது சிறுவன் அவர்களிடம் தான் ஒரு கோலிக்குண்டை விழுங்கி விட்டதாக கூறியிருக்கிறார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் சிறுவனை மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.
ஒரு கோலிக்குண்டை மட்டுமே விழுங்கியதாக மருத்துவரிடம் கூறியதால், அவர் அது சில நாட்களில் மலத்தின் வழியாக வெளியேறிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் ஒரு வாரத்திற்கு பிறகும் வெளியேறாததால் சிறுவனின் பெற்றோர்கள் பயந்து வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது அங்கு சிறுவனுக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் மருத்துவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் சிறுவனின் உடலுக்குள் சிறிய கோலி குண்டுகள் ஏராளமாக இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மொத்தம் 123 கோலிக்குண்டுகள் எடுக்கப்பட்டன.