Categories
தேசிய செய்திகள்

டி.ஆர்.பி மோசடி – கோஸ்வாமி மனு தள்ளுபடி

ரிபப்ளிக் சேனலுக்கு எதிரான டி.ஆர்.பி மோசடி வழக்கை மும்பை போலீஸ் விசாரித்து வரும் நிலையில் வழக்கை சிபிஐக்கு மாற்றக்கோரி அர்னாப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. தொடர்ந்து டி.ஆர்.பி ரேட்டிங் முறையை 12 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

டி.ஆர்.பி ரேட்டிங்கை செயற்கையாக அதிகரித்து காட்டுவதற்காக ரிபப்ளிக் உள்ளிட்ட 3 சேனல்கள் முறைகேடுகளில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. சேனலை பார்ப்பதற்கு ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 400 ரூபாய் வரை வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த வழக்கை விசாரிக்கும் மும்பை போலீஸ் ரிபப்ளிக் சேனல் நிர்வாகிகளை விசாரணைக்கு ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியது. அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த ரிபப்ளிக் டிவி உரிமையாளர் அர்னாப் கோஸ்வாமி இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மும்பை போலீசார் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் குற்ற விசாரணையில் இருந்து யாரும் விலக்கு கோர முடியாது என்றும்.

குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் விசாரணை முறைகளை தீர்மானிக்கவோ அல்லது கட்டளையிடவோ  முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும் மற்ற சேனல்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கின்ற நிலையில் ரிபப்ளிக் சேனல் மட்டும் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அர்னாப் கோஸ்வாமியின் மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம் கோஸ்வாமி மும்பை உயர்நீதிமன்றத்தை நாடலாம் என தெரிவித்தது. இதனிடையே டி.ஆர்.பி ரேட்டிங் மோசடி வெளியானதைத் தொடர்ந்து வாரம் தோறும் வெளியாகும் டி.ஆர்.பி ரேட்டிங்கை அடுத்த 12 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக பார்க் எனப்படும் ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.

Categories

Tech |