சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக இரண்டு நாட்களில் விசாரணைக்கு ஆஜராகும்படி சிபிஐ தரப்பில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
கர்நாடகா முன்னாள் அமைச்சரும் மாநில காங்கிரஸ் தலைவருமான டி.கே சிவகுமார் வீட்டில் கடந்த ஆண்டு வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 8 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தையும், சில ஆவணங்களையும், அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் 75 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு முறையான கணக்கு இல்லை என்பதும் தெரிய வந்தது. இந்த விவகாரம் சிபிஐ மாற்றப்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் டி.கே சிவகுமாருக்கு சொந்தமான 14 இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 57 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் பெங்களூரில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ தரப்பில் டி.கே சிவகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.