ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதனிடையில் அந்த நாட்டின் தலைநகர் காபுலிலுள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் உள்நாட்டு டி20 கிரிக்கெட் லீக் போட்டி நேற்று நடந்தது. ஷபெஜா டி20 கிரிக்கெட் லீக் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெண்ட் -இ அமீர் டிராகன்ஸ் மற்றும் பமீர்ஷல்மி அணிகள் மோதிகொண்டன. இந்த போட்டியை உள்ளூர் மக்கள் கண்டு ரசித்தனர். அத்துடன் போட்டியை தலீபான் அரசின் முக்கிய பிரதிநிதிகளும், ஆப்கானிஸ்தானுக்கான ஐ.நா. துணை தூதர் ராமிஸ் அலக்பரொவ் உள்பட பல்வேறு நபர்களும் கண்டுகளித்தனர்.
இதற்கிடையில் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மைதானத்தில் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த ஒரு அரங்கில் திடீரென்று பயங்கர சத்தத்துடன் வெடிகுண்டு வெடித்தது. மைதானத்திலிருந்த கையெறி குண்டு வெடித்து இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மைதானத்தில் கிரிக்கெட்டை கண்டுகளித்துக் கொண்டிருந்த பார்வையாளர்கள் 4 பேர் பலத்த காயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.எஸ். ஹரசன் மாகாணம் பிரிவு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று உள்ளது. இத்தாக்குதல் சம்பவம் குறித்து தலிபான்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.