ரஞ்சித் தொடரில் மிக சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாக தனது வேலையை ஆரம்பித்துள்ளார் சூர்யகுமார் யாதவ்..
இந்திய கிரிக்கெட் அணியில் தவிர்க்க முடியாத நட்சத்திர வீரராக உருவெடுத்து வருகிறார் சூர்யகுமார் யாதவ். இந்த 2022 ஆம் ஆண்டு டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக மிகச் சிறப்பாக ஆடி வரும் சூர்யகுமார் யாதவ் சர்வதேச டி20 கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கிறார். தற்போது டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை சூர்யகுமார் யாதவ் இல்லாமல் இந்திய அணி களம் இறங்காது என்பதே உண்மை. அந்த அளவிற்கு அவரது ஆட்டம் மிக சிறப்பாக இருக்கிறது. சூர்யகுமார் யாதவ் இந்த ஆண்டு மட்டும் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் 1,164 ரன்கள் குவித்துள்ளார். அதில் 2 சதங்களும், 9 அரை சதங்களும் அடங்கும்..
அது மட்டுமில்லாமல் இந்த ஆண்டு முழுவதுமே 46 ரன்கள் சராசரியுடன் 187 ஸ்ட்ரைக் ரேட்டில் கிரிக்கெட் உலகையே அதிர வைத்துள்ளார். டி20 யில் சூர்யகுமார் யாதவ் கில்லியாக இருந்தாலும் டெஸ்ட் போட்டியில் சொல்லும் அளவிற்கு இதுவரையில் அவரது செயல்பாடு அமையவில்லை. அவருக்கு இந்திய அணியில் டெஸ்ட் போட்டிக்கான வாய்ப்பும் பெரிதாக கிடைக்கவில்லை.. எனவே அடுத்ததாக இந்திய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் பங்கேற்பதற்கு தீவிர முயற்சியை மேற்கொள்வேன் என ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளார்.
அதன்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பிடிக்க தனது வேலையை இப்போது ஆரம்பித்துள்ளார் சூர்யகுமார் யாதவ். இது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் கடந்த 2010 ஆம் ஆண்டு ரஞ்சி கிரிக்கெட் தொடருக்காக சூர்யகுமார் அறிமுகமான நிலையில், இதுவரையில் 74 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் 5,326 ரன்கள் குவித்துள்ளார். இதில் 14 சதங்களும், 26 அரை சதங்களும் அடங்கும்..
இந்நிலையில் தற்போது ரஞ்சி கிரிக்கெட் சீசனில் விளையாட இருக்கிறார் சூர்யகுமார் யாதவ். 17 பேர் கொண்ட மும்பை அணியில் சூர்யகுமார் யாதவ் பங்கேற்று விளையாடவுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை அணி ஏற்கனவே ஆந்திர பிரதேஷ் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், அடுத்ததாக ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாட உள்ளார்.
இந்த போட்டி நாளை முதல் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணியின் கேப்டனாக ரஹானே செயல்பட்டு வருகின்றார். ரஹானே தலைமையிலான மும்பை அணியில் சூர்யகுமார் யாதவும் இடம் பிடித்துள்ளார்.. எனவே இந்த ரஞ்சித் தொடரில் மிக சிறப்பாக விளையாடி டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தேர்வாக தனது முழு திறமையையும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கலாம். இந்த ரஞ்சித் தொடரில் அவர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அடுத்து இந்தியாவில் நடைபெற உள்ள உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு இருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்..