Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

டி20 உலக கோப்பை….. “தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் உண்டா”….. எங்க இறக்குவீங்க?…. ஆகாஷ் சோப்ராவின் கருத்து என்ன?

டி20 உலக கோப்பையில் தினேஷ் கார்த்திக் இடம்பிடிப்பது பற்றி கருத்து தெரிவித்துள்ளார் ஆகாஷ் சோப்ரா.

இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் இந்திய அணியும், இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வென்றுள்ளது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து இருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகள் அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் இன்றும், நாளையும் நடைபெற இருக்கிறது. அக்டோபர் மாதத்தில் உலகக் கோப்பை நடைபெறும் என்பதால் இந்த தொடரை வென்று தாயகம் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியின் போது இந்திய அணி தடுமாறிய நிலையில் இக்கட்டான சூழலில் வந்து தினேஷ் கார்த்திக் சிறப்பாக பேட்டிங் செய்து 41 ரன்கள் விளாசியதன்  மூலம் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகன் விருதும் தினேஷுக்கு கிடைத்தது. கடந்த 2004 ஆம் ஆண்டு அறிமுகமான தினேஷ் கார்த்திக் ஜாம்பவான் விக்கெட் கீப்பர் கேப்டன் தோனி இருந்ததன் காரணமாக பெரும்பாலும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், கடந்த 2019 உலகக்கோப்பையில் விளையாடினார். அதன்பின் இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டப்பட்டு விட்டார்.

இருப்பினும் மனம் தளராமல் இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் சிறப்பான ஆட்டத்தை ஆட ஆரம்பித்தார். இந்திய அணியில் இடம் கிடைக்காத அவர் ஐபிஎல் போட்டியில் விளையாடி வந்த நிலையி,ல் ஒரு கட்டத்தில் வர்ணனையாளராகவும் செயல்பட துவங்கி விட்டார். இதனால் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விட்டது என்று தான் அனைவரும் எண்ணிக் கொண்டிருந்தனர்.

ஆனால் டி20 கிரிக்கெட்டில் தன்னால் சாதிக்க முடியும் என்று நம்பிய அவர் உலக கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் கடந்த 2022 ஐ பி எல் தொடரில் பெங்களூர் அணிக்காக நல்ல பினிஷிங் கொடுத்தார். அவர் அந்த தொடரில் 330 ரன்களை 183.3 என்ற வெறித்தனமான ஸ்ட்ரைக் ரைட்டில் ஆடி சூப்பர் ஸ்ட்ரைக்கர் விருதையும் தட்டி சென்றார்.

இதன் காரணமாக மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்த தினேஷ் கார்த்திக் தென்னாபிரிக்க டி20 தொடரில் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி முடிந்த அளவுக்கு சிறப்பாக ஆடி வருகிறார். 37 வயதுக்கு பின் இரண்டு ஆட்டநாயகன் விருது மற்றும் அதிக ரன்களை குவித்த இந்திய வீரர் என்ற சாதனையுடன் கெத்தாக செயல்பட்டு வருகிறார். இவருக்கு கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோரின் ஆதரவும் இருப்பதால் டி20 உலக கோப்பையில் கண்டிப்பாக அவர் இடம் பிடிப்பார் என்று அனைவராலும் நம்பப்படுகிறது.

ஆனாலும் 37 வயதை கடந்துள்ள தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இடம் பிடிப்பாரா? என்ற கேள்வி சற்று எழுந்துள்ளது. ஏனென்றால் இந்திய அணியில் ரிஷப் பண்ட், இஷான் கிஷன், கே.எல் ராகுல், உள்ளிட்ட இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களும், அதேபோல ஹர்திக் பாண்டியா, ரவிந்திர ஜடேஜா போன்ற முக்கியமான பினிஷிங் செய்யக்கூடிய வீரர்களும் இருக்கிறார்கள்.. இதனால்தான் இவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பதில் சற்று சந்தேகம் இருக்கிறது.

அது மட்டுல்லாமல் கடந்த ஐபிஎல் தொடர் முடிந்த பின் அவருக்கு வாய்ப்பு கிடைத்த அனைத்து போட்டியிலுமே முக்கியமான வீரர்கள் ஓய்வெடுத்துக் கொள்வது மற்றும் காயமடைவது என்று விலகியே இருக்கின்றனர். ஆனால் அடுத்து நடைபெறும் ஆசிய கோப்பையில் கே.எல் ராகுல், ஜஸ்பிரிட் பும்ரா, விராட் கோலி, தீபக் சஹர் உட்பட ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அனைத்து மற்றும் காயமடைந்து வீரர்கள் அணிக்கு திரும்புகிறார்கள். அந்த தொடரில் இருந்து தான் உலகக்கோப்பை அணிக்கு வீரர்களை தேர்வு செய்கிறார்கள். இதனால் இந்த முக்கிய வீரர்களுக்கு மத்தியில் யாரை நீக்கிவிட்டு தினேஷ் கார்த்திக்கை இந்திய அணியில் கொண்டுவர முடியும் என்று முன்னால் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், இந்திய அணியில் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி, சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா மற்றும் நான்கு பந்துவீச்சாளர்கள் தான் விளையாட போகின்றார்கள். எனவே தினேஷ் கார்த்திக்கை நீங்கள் எந்த இடத்தில் விளையாட வைப்பீர்கள். ஒருவேளை தினேஷ் கார்த்திக் பினிஷராக ஆடுவாரா?. இல்லையென்றால் விக்கெட் கீப்பிங் செய்வதற்காக ரிஷப் பண்ட் அணியில் இடம் பிடித்து கே.எல் ராகுல் நீக்கப்பட்டு விடுவாரா? என்பது மிகப் பெரிய கேள்வியாகும். இதை ஏன் இப்போது நான் பேசுகிறேன் என்று நீங்கள் அனைவரும் நினைக்கலாம். எனவே அனைத்து வகையிலும் யோசித்துப் பார்த்தோம் என்றால் எனது மிகப் பெரிய கேள்வியும் விடையும் என்னவென்றால், தினேஷ் கார்த்திக் பினிஷர் ஆக மட்டுமே அணியில் இடம் பெற முடியும். ஆனால் அதுக்காக நீங்கள் யாரை நீக்கம் செய்வீர்கள்.

உங்களிடம் ரோகித் சர்மா, கேஎல் ராகுல், சூர்யகுமார், ஹர்திக் பாண்டியா, 6ஆவது வீரராக பண்ட் இருக்கிறார். ஒருவேளை ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரும் இணைந்து விளையாடுவார்களா? என்பதை இந்த ஆசிய கோப்பையில் நம்மால் அறிந்து கொள்ள முடியும் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |