கியாஸ் விலை உயர்ந்ததன் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் டீக்கடை ஒன்றில் ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டீக்கடைகளிலும் குடிக்க தண்ணீர் கேட்டால் இலவசமாக தயக்கமின்றி கொடுப்பார்கள். மேலும் பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் சூடான வெந்நீரை டீக்கடைக்காரர்கள் தயக்கமின்றி பிடித்துக் கொடுப்பார்கள். இன்னும் இந்த பழக்கத்தை டீக்கடைக்காரர்கள் கடைபிடித்து வருகின்றன. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கல கடைவீதியில் பிரபல டீக்கடை ஒன்று உள்ளது. அந்த டீக்கடையில் நோட்டீஸ் ஒன்று ஒட்டப்பட்டு உள்ளது.
அந்த நோட்டீஸில் கேஸ் விலை ஏற்றம் காரணமாக 1/2 லிட்டர் வெந்நீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், 1 லிட்டர் வெந்நீர் ரூ.20-க்கு விற்பனை செய்யப்படுவதாகவும், வெந்நீர் இலவசம் இல்லை என்றும் அச்சடிக்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீஸ் குறித்து டீக்கடைக்காரர் ஒருவர் கூறுகையில், 19 கிலோ எடைகொண்ட கமர்சியல் கேஸ் சிலிண்டர் கடந்த 2014-ஆம் ஆண்டு ரூ.1050 என்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஆனால் இப்போது ரூ.1500 க்கு விற்கப்படுகிறது. இந்த கேஸ் விலை உயர்வு காரணமாக வெந்நீரை கூட விலைக்கு விற்பனை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.