இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்குரிய பா.ஜ.க வேட்பாளர் பட்டியலை வெளியிட்டதில் இருந்தே சஞ்சய் சூட் என்பவர் பிரபலமாகி உள்ளார். இதில் சஞ்சய் சூட்(57) சிம்லாவில் டீக்கடை ஒன்று நடத்தி வருகிறார். சிம்லா நகர்ப்புற தொகுதியில் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்த வரும், முன்னாள் அமைச்சருமான சுரேஷ் பரத்வாஜ்க்குப் பதில் சஞ்சய் சூட்டை நிறுத்த பா.ஜ.க முடிவுசெய்துள்ளது. தற்போது சஞ்சய் சூட் சிம்லா நகர்ப்புறத்தில் வசிப்பவர் ஆவார். இவர் கடந்த 2007ல் நடைபெற்ற கவுன்சிலர் தேர்தலில் பா.ஜ.க சார்பாக போட்டியிட்டார்.
அத்துடன் சஞ்சய் சூட் ஒரு கடின உழைப்பாளி மற்றும் போர்க்குணம் வாய்ந்த தொழிலாளியாக கட்சியில் அங்கீகரிக்கப்பட்டவர் ஆவார். இதனால் அவரை தேர்தலில் போட்டியிட வைக்க கட்சி முடிவுசெய்திருக்கிறது. இந்நிலையில் இமாச்சலபிரதேச சட்டசபை தேர்தலுக்குரிய வேட்புமனு தாக்கல் துவங்கியது. இதனிடையில் சிம்லா நகர்ப்புற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் சஞ்சய் சூட் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
இத்தொகுதி பாஜக-வின் சாதகமான தொகுதி என கருதப்படுகிறது. தற்போது சஞ்சய் சூட் கட்சியால் நியமனம் செய்யப்பட்டதை அடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதோடு, பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார். வேட்பு மனு தாக்கலின்போது செய்தியாளர்களிடம் சஞ்சய் சூட் பேசியதாவது “தேர்தலில் சிறுதொழிலாளி ஒருவரை கட்சி வேட்பாளராக பாஜக நிறுத்தி இருக்கிறது. இதற்காக நானும் மற்றும் அனைத்து கட்சி தொண்டர்களும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பாஜக-வில் மட்டுமே சாதாரண டீக்கடை தொழிலாளியை கூட சட்டசபை தேர்தலில் வேட்பாளராக களம்காண முடியும்” என்றார்.