கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள மாசிநாயகனப்பள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 11ஆம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியை ஒருவர், ஒழுங்கீனமாக இருந்த மாணவர் ஒருவரை அழைத்து கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த மாணவர் ஆசிரியை கன்னத்தில் அறைந்து அவரை கீழே தள்ளி விட்டுள்ளார்.
இது குறித்து மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்பு சம்பந்தப்பட்ட மாணவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் ஆகியவை வலியுறுத்தி உள்ளன. மாணவர் ஆசிரியரை அடித்து தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.