கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சந்தாபுரம் பகுதியில் விறகு கடை உரிமையாளரான சாந்தி என்பவர் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் சாந்தி கொசமேடு பகுதியில் இருக்கும் வங்கியில் தங்க நகைகளை அடகு வைத்து 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மேலும் தனது சேமிப்பு கணக்கில் இருந்த 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துள்ளார். இதனையடுத்து 4 லட்ச ரூபாயும் சாந்தி ஸ்கூட்டர் இருக்கைக்கு கீழ் வைத்து பூட்டிவிட்டு அப்பகுதியில் இருக்கும் கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது ஸ்கூட்டர் சீட் உடைக்கப்பட்டு 4 லட்ச ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றதை அறிந்து சாந்தி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து சாந்தி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது 4 வாலிபர்கள் ஸ்கூட்டரின் சீட்டை உடைத்து பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.