Categories
உலக செய்திகள்

“டீ குடிப்பதை குறைத்து கொள்ளுங்கள்”…. கடும் பொருளாதார நெருக்கடி…. கோரிக்கை விடுத்த பாகிஸ்தான் அமைச்சர்….!!

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் மக்கள் டீ குடிப்பதை நிறுத்திக் கொள்ளுமாறு அந்நாட்டின் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். 

இலங்கையை போல பாகிஸ்தான் நாட்டிலும் மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகின்றனர். இந்நிலையில் மானிய திட்டங்களை பாகிஸ்தான் ரத்து செய்துள்ளதால் அந்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவில் உள்ளது. இங்கு பண வீக்கம் அதிகரிப்பால் இறக்குமதி செய்யவும் போதிய நிதியின்றி தவிக்கும் நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தேயிலை இறக்குமதி அரசாங்கத்திற்கு அதிக சுமையாக உள்ளதால் பொதுமக்கள் டீ குடிப்பதை குறைத்துக்கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு  கோரிக்கை விடுத்துள்ளது.

இதனைத் தொடர்ந்து திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறை மந்திரி அஷன் இக்பால் கூறியதாவது, “பாகிஸ்தான் மக்கள்  ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தேநீர் அருந்த வேண்டும். கடனை பெற்றே நாங்கள் தேயிலையை இறக்குமதி செய்கின்றோம். மின்சாரத்தை சேமிப்பதற்காக வணிக நிறுவனங்கள் முன்னதாகவே தங்கள் செயற்பாடுகளை முடித்துக்கொள்ளவேண்டும்” என்று அவர் கூறியுள்ளார். மேலும் 20 கோடி மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தான், உலகில் அதிக அளவு தேயிலை இறக்குமதி செய்யும் நாடாக விளங்குகின்றது. கடந்த 2020ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் 640 மில்லியன் டாலர் மதிப்பில் தேயிலையை இறக்குமதி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |