குடியரசு தினம், சுதந்திர தினம் ஆகிய விழாநாட்களில் கவர்னர் மாளிகையில் கவர்னர் தேநீர் விருந்துக்கு அழைப்பது வழக்கம் ஆகும். இந்நிகழ்ச்சியில்முதல்வர், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., முதலமைச்சரின் செயலாளர்கள் மற்றும் முக்கியமான அரசு அதிகாரிகள் கலந்துகொள்வது வழக்கம் ஆகும். கடந்த குடியரசு தினத்தில் கொரோனா காரணமாக கவர்னரின் தேநீர் விருந்து நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சித்திரை மாத முதல் தேதியான தமிழ் புத்தாண்டு தினத்தன்று (நேற்று) கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து வழங்கபடுவதால் அதில் தமிழக அரசு மற்றும் அனைத்து கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்று கவர்னர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இந்நிகழ்ச்சியை திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்தது.
இந்நிலையில் திமுக கூட்டணியின் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதால் டீ செலவு மிச்சம் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியதற்கு தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பதிலடி கொடுத்துள்ளார். அதில் இந்த தேநீர் விருந்து யாருடைய தனிப்பட்ட நிதியிலிருந்தும் வழங்கப்படுவதில்லை. தமிழக மக்களின் பணத்திலிருந்து செலவிடப்படுகின்றது. சொன்னதுபோல் சேமிப்பு இருந்ததா? இல்லையா? என்பதை அறிய பில் வரும்வரை காத்திருப்போம் என்று தெரிவித்துள்ளார்.