உலக பணக்காரர்களில் ஒருவரான எலான்மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கியதிலிருந்து அந்நிறுவனம் தொடர்பான தகவல்கள் வைரலாகி வருகிறது. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்களில் பல ஆயிரம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இது தவிர்த்து டுவிட்டர் புளூ சந்தா, புளூடிக் விவகாரம் என பெரும்பாலான புது மாற்றங்கள் டுவிட்டரில் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் டுவிட்டர் டைரக்ட் மெசேஜஸ் அம்சத்தில் புதியதாக பாதுகாப்பு அம்சம் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி டுவிட்டர் டிரைக்ட் மெசேஜஸ்-ல் எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் வசதியானது கூடியவிரைவில் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தகவல் வெளிவந்ததில் இருந்தே, புது பாதுகாப்பு அம்சம் டுவிட்டர் தளத்தை வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமை விட பாதுகாப்பானதாக மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. டுவிட்டர் மெசேஜஸ்-ல் எண்ட்-டு-எண்ட் என்க் ரிப்ஷன் வசதியினை செயல்படுத்தும் விபரங்களை ஆப் ஆய்வாளர் ஜான்மன்குன் வொங் கண்டறிந்து உள்ளார். அத்துடன் இத்தகவல்களை அவர் தன் டுவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
அவற்றில், டுவிட்டர் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் வழங்குவதற்காக புது அம்சம் உருவாக்கப்படும் அறிகுறிகளை பார்க்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். இவரது டுவிட்டர் பதிவுடன், குறியீட்டு விபரங்களானது இணைக்கப்பட்டு உள்ளது. இது என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுவதை உணர்த்துகிறது. இதை மேலும் உறுதிப்படுத்தும் அடிப்படையில், இவரது பதிவுக்கு எலான்மஸ்க் கண் சிமிட்டும் எமோஜியை பதிலாக அளித்திருக்கிறார். இவரது பதிலிலிருந்தே டுவிட்டர் மெசேஜஸ்-ல் என்க்ரிப்ஷன் வசதி வழங்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.
அந்த வசதியை வழங்குவதன் வாயிலாக டுவிட்டர் டிரைக்ட் மெசேஜஸ் அம்சம் சிக்னல் மற்றும் வாட்ஸ்அப்-க்கு இணையாக பார்க்கப்படும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இந்த அம்சம் சரியான தருணத்தில் கொண்டுவரப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அவ்வசதியானது பயனர் அனுப்பும் குறுந்தகவல்களை யாரும் பார்க்க இயலாத அடிப்படையில் பாதுகாப்பானதாக மாற்றும்.