கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று ஒரே நாளில் மட்டும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். ஊழலில் திளைத்த 15 அதிகாரிகளை குறிவைத்து அவருடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது. எட்டு எஸ்பி கல் 400க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய படை மாநிலம் முழுவதும் ரெய்டு நடத்தியது கர்நாடகாவையே அதிரவைத்தது. இதில் பொதுப்பணித்துறை இளநிலை இன்ஜினியரான சாந்தா கெளடா பிராதார் வீட்டில் சிக்கிய பணக்கட்டுகள் தான் அனைவரையும் அதிர வைத்து விட்டது.
இவர் தன்னுடைய வீட்டில் பணத்தை மிகவும் வித்தியாசமான முறையில் பதுக்கி வைத்திருந்துள்ளார். அதாவது அவருடைய வீட்டின் கழிவு நீர் வெளியேறும் பைப்பில் பணக்கட்டுகளை பாதுகாப்பான முறையில் பதுக்கி வைத்துள்ளார். இதனை கண்டுபிடித்த அதிகாரிகள் பணக்கட்டுகளை வெளியே எடுத்தனர். இந்த அளவுக்கு டெக்னிக்கலாக பணத்தை பதுக்கி வைத்திருந்த இன்ஜினியரிங் தொழில்நுட்ப அறிவைப் பார்த்து அங்கிருந்தவர்கள் ஆடிப் போயுள்ளனர். பைப்பில் மொத்தம் 13.5 லட்சம் பணத்தை பதுக்கி வைத்து இருந்துள்ளார். அதோடு வீட்டின் மேற்கூரையில் 15 லட்சம் பணத்தை பதுக்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.