தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. அதன்படி தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
இதற்கு மார்ச் 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அதன்படி trb.tn.nic.in என்ற இணையதள பக்கம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இன்று அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்பிக்க ஏற்கனவே கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டதால் இதற்குமேல் அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.