மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கோவா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க வியூகம் அமைத்திருக்கிறது.
பாரதிய ஜனதாவிற்கு மாற்றாக தேசிய அளவில் காங்கிரசை தவிர வேறு கட்சிகள் இல்லாமல் போனதால் அந்த இடத்தை பிடிக்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நடவடிக்கை எடுத்துள்ளார். கோவா பனாஜி நகரில் அவர் பங்கேற்ற கூட்டத்தில் பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மம்தா பானர்ஜி தான் பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் கோவாவில் முகாமிட்டு செயல்படவில்லை என்றார்.
பாரதிய ஜனதா கட்சி நாட்டை விற்று விடுவார்கள் என்பதால் நாட்டை காப்பாற்றவே கட்சியை வளர்த்து வருவதாக அவர் குறிப்பிட்டார். இதுபற்றி அவர் பேசியதாவது, கோவாவுக்கு வணக்கம். நான் பிரதமர் ஆவது முக்கியமல்ல. நாட்டில் வளர்ச்சி வேண்டும். அதுவே திரிணாமுல் காங்கிரஸ் விருப்பம். ஆகவே கோவாவில் இருந்து அதனை தொடங்க விரும்புகிறேன் என்று கூறினார்.
அதையடுத்து 48 வயதான லியாண்டர் பயஸ் வெளியிட்டுள்ள செய்தியில், டென்னிஸ் விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்றதால் அரசியலில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக கூறியுள்ளார். நாட்டில் மாற்றம் கொண்டுவர உண்மையான சாம்பியன் மம்தா பேனர்ஜியால் மட்டுமே முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பாலிவுட் நடிகை நபீஸா அலி மற்றும் சமூக செயற்பாட்டாளர் மிருணாளினி தேஸ் பிரபு ஆகியோர் மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்.