வாட்ஸ்அப் நிறுவனம் தனது பயனாளர்களுக்கு புதிய நிபந்தனையை விதித்துள்ளதால் வேறு செயலிகளுக்கு பயனாளர்கள் மாறி வருகின்றனர்.
வாட்ஸ் அப் புதியநிபந்தனைகளை ஏற்றுக் கொண்டால் மட்டுமே சேவையை தொடர்ந்துபயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பயனாளிகளின் தரவுகளை வாட்ஸ் அப் கையாளும் விதம் தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியையும், குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளன. குறிப்பாக, வாட்ஸ் அப் சேவையை தொடர்ந்து பயன்படுத்த பேஸ்புக்குடன் தரவுகளை பகிர்ந்து கொள்ள சம்மதம் தெரிவிக்க வேண்டும் என நிர்பந்திக்கும் வகையில் நிபந்தனைகள் அமைந்திருப்பதாக கூறப்படுவது பயனாளிகளை அதிருப்தி அடைய வைத்துள்ளது.
இதையடுத்து, தரவுகளை தாய் நிறுவனமான பேஸ்புக்குடன் பகிர நிர்பந்திப்பதால், வாட்ஸ் அப்பை விட்டு வெளியேற வேண்டும் என்ற கருத்தும் சமூக ஊடகங்களில் முன்வைக்கப்பட்டு, டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட மேசேஜிங் சேவைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன. புதிய கொள்கை மாற்றத்தை டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலான் மஸ்க் உள்பட பலர் விமர்சித்தனர். இந்நிலையில், வாட்ஸ்அப் நிறுவனம், பயனர்களின் தரவுகளை பேஸ்புக்கில் இணைக்க நாங்கள் ஒருபோதும் கட்டாயப்படுத்த மாட்டோம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தப் புதிய அப்டேட் முழுவதுமாக வணிக ரீதியாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் இதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறோம். உங்களின் தரவுகள் பேஸ்புக்குடன் பகிர கட்டாயப்படுத்தப் போவதில்லை. உங்களின் தனிப்பட்ட தகவல் பரிமாற்றத்தை இந்தப் புதிய கொள்கை பாதிக்காது. எங்களின் கொள்ளைகளை வெளிப்படையாக்கியுள்ளோம். விருப்பம் உள்ளவர்கள் மட்டுமே வணிகப் பயன்பாட்டிற்கு மாறிக்கொள்ளலாம். இது குறித்து ஏற்கனவே அக்டோபர் மாதத்தில் அறிவித்திருந்தோம்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அதேநேரம், வாட்ஸ் அப் மாற்றி அமைக்கப்பட்ட நிபந்தனைகள், தகவல்கள் சேகரிக்கப்படும் விதம் தொடர்பாக விரிவாக குறிப்பிட்டிருந்தாலும், பல அம்சங்கள் தொடர்பாக தெளிவாக விளக்கம் அளிக்காமல், தொழில்நுட்ப வார்த்தைகளை போட்டு குழப்பி இருப்பதாகவும் தனியுரிமை ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.