Categories
மாநில செய்திகள்

‘டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக விரைவில் மாறும்’ – அமைச்சர் காமராஜ் உறுதி

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக விரைவில் மாற்றப்படும் என அமைச்சர் காமராஜ் உறுதியளித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் புலிவலம் பகுதியிலுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை உணவுத் துறை அமைச்சர் காமராஜ் தலைமையில், தமிழ்நாடு நுகர்ப்பொருள் வாணிப கழக நிர்வாக இயக்குநர் சுதாதேவி, மாவட்ட ஆட்சியர் ஆனந்த், உணவுப் பொருள் குற்றப்புலனாய்வு காவல் இயக்குநர் பிரதீப் உள்ளிட்டோர் நெல் மூட்டைகளின் எடை, தரம் ஆகியவை குறித்து ஆய்வு செய்தனர்.

நெல் மூட்டை ஆய்வின்போது மூட்டை எடை நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக இருப்பதைக் கண்டு அமைச்சர் காமராஜ் எடையிடும் ஊழியர்களையும் பணியாளர்களையும் எச்சரித்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறும்போது, “தமிழ்நாடு முழுவதும் ஆயிரத்து 697 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இன்றுவரை ஐந்து லட்சத்து 89 ஆயிரத்து 951 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் ஈடுபடுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.

மேலும் பேசிய அவர், ”ஹைட்ரோ கார்பன், மீத்தேன் போன்ற திட்டங்களைக் காவிரி டெல்டா பகுதிகளில் நிறைவேற்றக் கூடாது என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அதனடிப்படையில் காவிரி டெல்டா பகுதியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். அதன்படி காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக விரைவில் மாற்றப்படுவது உறுதி” எனத் தெரிவித்தார்.

Categories

Tech |