விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க முதியவர் ஆயிரம் கிலோமீட்டர் சைக்கிள் பயணம் செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெறும் வரையில் போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு அனைத்து தரப்பினரும் தங்கள் ஆதரவை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்க முதியவர் ஒருவர் 11 நாட்களில் ஆயிரம் கிலோ மீட்டர் சைக்கிளில் பயணம் செய்துள்ளது கவனம் பெற்றுள்ளது. அவர் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறும்வரை தானும் போராட்டத்தில் பங்கேற்க போவதாக தெரிவித்துள்ளார். பீகாரை சேர்ந்த சத்யதேவ் மஞ்சு என்ற இவர் திக்ரி என்ற இடத்தில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு நேரில் ஆதரவு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.