டெல்லியில் இன்றும் காற்று மாசு அதிகரித்து காணப்படுவதால் சாலைகளில் வாகனங்களை இயக்க முடியாமல் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
தலைநகர் டெல்லியில் சுற்றுச்சூழல் மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குளிர்கால பனிப்பொழிவின் இடையே காற்று மாசு கலந்து பார்வை இடைவெளியை குறைக்குகிறது. அதுமட்டுமின்றி கண்ணெரிச்சல் சருமநோய் பிரச்சினைகளையும் உண்டாக்குகிறது. டெல்லியில் இன்றும் வழக்கம் போல் காலையிலேயே வீதி எங்கும் பனி மூட்டம் போல ஒரே புகை மண்டலமாக காட்சி அளித்தது.
இந்தியா கேட், விஜய் சவுக், சராய் ரோகில்லா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காற்று தரக் குறியீட்டு கண்காணிப்பு நிலையங்களில் தரக்குறியீடு மிகவும் கடுமையான நிலையில் பதிவானது. கொரோனா நோய் பரவல் காலத்தில் டெல்லியில் காற்றில் மாசு அளவு மிகவும் அதிகரித்து இருப்பது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனை எப்படி தடுப்பது என தெரியாமல் மத்திய அரசும் டெல்லி அரசு திண்டாடி வருகின்றன.