டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமான நிலையில் உள்ளது. இதற்காக டெல்லி அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் காற்றின் தரம் இன்னும் மோசமான நிலையிலே இருந்து வருகிறது. இது குறித்த வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த தலைமை நீதிபதி என்.வி. ரமணா, காற்று மாசை கட்டுப்படுத்த தவறிய மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது.
அதுமட்டுமில்லாமல் டெல்லியில் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும் என்று முடிவு செய்த கெஜரிவால் அரசின் முடிவை சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம் தெரிவித்தது. பெரியவர்களை வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் குழந்தைகள் மட்டும் பள்ளிக்கு வர வேண்டுமா? என்று சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
அதனைத் தொடர்ந்து கடந்த வாரங்களில் காற்றின் தரம் மேலும் மோசமடைந்ததை தவிர வேறு எந்த மாற்றமும் தெரியவில்லை என்று சுப்ரீம் கோர்ட் அதிருப்தியை வெளிப்படுத்தியது. எனவே 24 மணி நேரத்திற்குள் டெல்லியின் காற்று மாசு கட்டுப்படுத்துவதற்காக உறுதியான செயல் திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுக்கு உத்தரவிட்டு சுப்ரீம் கோர்ட் இன்று வழக்கை ஒத்தி வைத்துள்ளது.