Categories
தேசிய செய்திகள்

டெல்லியில் தொடரும் விவசாயிகள் போராட்டம்… ரூ.814 கோடி இழப்பு… அதிர்ச்சி செய்தி…!!!

டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலைத் துறைக்கு 814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் அனைவரும் கடந்த 119 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கொட்டும் பனியிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசு பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் எந்த ஒரு முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டத்தை முழுவதுமாக திரும்ப பெரும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என விவசாயிகள் அனைவரும் தெரிவித்துள்ளனர்.

தற்போதுவரை போராட்டக்களத்தில் 150க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு மத்தியில் டிராக்டர் பேரணி, உண்ணாவிரதம் மற்றும் பொது முடக்கம் என பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் நடத்தினர். இருந்தாலும் எந்த ஒரு பலனும் இல்லை. டெல்லி, சண்டிகர் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் பல்வேறு விவசாய சங்கங்கள் மையமிட்டுள்ள நிலையில், போராட்டம் 119வது நாளை எட்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். மேலும் விவசாயிகளின் கோரிக்கைக்கு எந்த முடிவும் கிடைக்கவில்லை என்பது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இந்நிலையில் விவசாயிகள் போராட்டத்தால் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு 814 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மேலும் பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகைத், விவசாய விளைபொருள்களை தேவைப்பட்டால் நாடாளுமன்ற வளாகத்திலேயே விற்பனை செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |