இன்று டெல்லியில் 67-வது தேசிய திரைப்பட விருதுகள் விழா நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், பிராந்திய திரைப்படங்கள் போன்ற பல பிரிவுகளின் கீழ் தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விழா நடைபெறாமல் இருந்த நிலையில், இன்று டெல்லியில் உள்ள விக்யான் பவனில் 2019-ஆம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இந்த முறை தமிழ் திரையுலகிற்கு 7 தேசிய விருதுகள் கிடைக்கிறது. அதன்படி சிறந்த பிராந்திய மொழி படமாக அசுரன் படத்திற்கு வழங்கப்படுகிறது.
சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த உறுதுணை நடிகர் விருது, அசுரன் படத்திற்காக தனுஷுக்கு சிறந்த நடிகர் விருது, கேடி (எ) கருப்புதுரை படத்திற்காக நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது, பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு சைஸ் 7 படத்திற்கு ஜூரி சிறப்பு விருது, விஸ்வாசம் படத்திற்காக டி.இமானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது ஆகியவையும் வழங்கப்பட இருக்கிறது. மேலும் இந்திய திரைப்பட விருதில் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிக்கு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.