டெல்லியில் தனியார் அமைப்பு சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 16 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த 1,500 பேர் பங்கேற்றுள்ளனர். அதில் தற்போது 981 நபர்களின் விவரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 16 பேருக்கு கொரோனா உறுதி படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை மற்றும் நாகபட்டினத்தை சேர்ந்த 1,500 பேர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு டெல்லியில் தனியார் அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட ஒரு மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இதே மாநாட்டில் தாய்லாந்து, இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த பலரும் பங்கேற்றுள்ளனர்.
இந்த நிலையில், தமிழகத்தை சேர்ந்த 1,500ன் பேரில் 981 நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களிடம் பல்வேறு விதமான சோதனைகள் நடத்தப்பட்டன. அதில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்த மாநாட்டில் பங்கேற்ற மீத நபர்களை கண்டறியும் பணி நடைபெற்று வருகிறது. காவல்துறையினரும், சுகாதாரத்துறையினரும் சேர்ந்து அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை தற்போது 67 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கக்கூடிய நிலையில், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 17 பேருக்கு கொரோனா இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு தொற்று இருந்த நிலையில், பலருக்கு கொரோனா தோற்று பரவியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.