ஓ.பி.எஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அ.தி.மு.க கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து கட்சியை வழி நடத்திச் சென்றனர். ஆனால் திடீரென அ.தி.மு.க கட்சியில் ஒற்றைத்தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த 23-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் போது ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கடுமையாக அவமானப்படுத்தப்பட்டதால் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பொதுக்குழுக் கூட்டத்தை பாதியிலேயே புறக்கணித்து விட்டு கிளம்பி சென்றனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிச்சாமி கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் எடப்பாடியின் ஆதரவாளர்களால் கூறப்பட்டு வருகிறது. இப்படி இருக்க திடீரென ஓ. பன்னீர்செல்வம் டெல்லிக்கு சுற்று பயணம் சென்றிருந்தார். அங்கு 2 நாட்கள் தங்கி இருந்த பன்னீர்செல்வம் பா.ஜ.க மேலிடத்திடம் கட்சியின் முக்கிய பிரச்சினைகள் குறித்து ஆலோசித்துள்ளதாகவும், பா.ஜ.கவும் சில அறிவுரைகளை கூறியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து இன்று சென்னைக்கு திரும்பிய ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
ஏனெனில் அ.தி.மு.க கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என பெரும்பான்மையான ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருப்பதால் ஓ. பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனக்கான ஆதரவை திரட்ட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் எடப்பாடிபழனிசாமி ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூற, ஓ. பன்னீர்செல்வம் இரட்டை தலைமை தான் சிறந்தது என்று கூறுகிறார். இதனால் அ.தி.மு.க கட்சியின் அடுத்த மாத பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க முடியும்