இந்தியா முழுவதும் கொரோனா தொற்று மூன்றாவது அலை வேகமாக பரவி வந்தது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அதன்படி வார இறுதி ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. மேலும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்து கொண்டே பணிபுரியவும் அனுமதி வழங்கப்பட்டது. இதற்கிடையே டெல்லியில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதால், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு வார இறுதி ஊரடங்கு உத்தரவு போன்ற தடைகளை நீக்கியுள்ளது.
மேலும் பள்ளி, கல்லூரிகளை திறக்க மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி 9 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதேபோல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அனுமதி இல்லை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இரவு நேர ஊரடங்கு ஒரு மணிநேரம் ( இரவு 11-காலை 5 மணி வரை ) குறைக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சிக் கூடங்கள் மீண்டும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.