டெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்றும் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து அதன் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தலைநகர் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 16-ம் தேதி மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக கெஜ்ரிவால் மற்றும் துணை முதலமைச்சராக மணீஷ் சிசோடியா பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களை தொடர்ந்து 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அவரது இல்லத்தில் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெல்லி தொடர்புடைய பல்வேறு விசயங்கள் குறித்து விவாதித்தோம் என கூறினார். டெல்லி வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றுவது என இருவரும் ஒப்பு கொண்டோம் என்றும் தெரிவித்துள்ளார்.
போதிய நிதி, மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது ஷகீன் பாக் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்குப் பதிலளித்த கெஜ்ரிவால், அது குறித்து பேசவில்லை என்று கூறியுள்ளார். மேலும் டெல்லி சட்டசபை கூட்டம் வருகிற 24-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறும் என்றும் முதலமைச்சர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.