உலக அளவில் வெப்ப நிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதனால் சர்வதேச அளவில் பல்வேறு இடங்களில் உள்ள பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. அதிலும் குறிப்பாக வானிலை மாற்றம் காரணமாக துருவப் பகுதிகளில் வெப்ப நிலை வேகமாக உயர்ந்து வருகிறது. அதன்படி அண்டார்டிகாவில் வழக்கத்தைவிட வெப்ப நிலை வேகமாக உயர்ந்து வருகிறது. அதன் விளைவாக இன்று அண்டார்டிகாவில் பனி பாறை ஒன்று உடைந்து நொறுங்கி கடலில் கலந்தது. இதுதான் உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை. டெல்லியை விட மூன்று மடங்கு பெரியது.
அண்டார்டிகாவில் உள்ள ரோனி ஐஸ் மலைப்பகுதியில் இந்த பனிப்பாறை உடைந்து பிரிந்து சென்றது. இதன் பெயர் ice berg A-76 என்பதாகும். தற்போது அர்ஜென்டினா அருகே உள்ள வெட்டல் கடல் பகுதியில் இந்த பனிப்பாறை மிதந்து கொண்டு இருக்கிறது. இதன் நீளம் 170 கிலோமீட்டர், அகலம் 25 கிலோமீட்டர் ஆகும். இது கடலில் மிதந்து கொண்டு இருப்பதால் கடல் நீர் மட்டம் உயராது என்று கடலியல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கொரோனா, புயல் மற்றும் நில நடுக்கம் ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் பனிப்பாறை உடைந்துள்ளது ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.