டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் வீடு உறவினர்கள் இல்லங்களில் அமலாக்கத் துறை நடத்திய சோதனையில் 2.82 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹவாலா பண பரிமாற்றம் தொடர்பாக ஏற்கனவே டெல்லி மாநில அமைச்சர் சத்யேந்திர ஜெயின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி அமலாக்கத் துறையினர் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.. இதுதொடர்பான வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம் ஏற்கனவே ஜூன் 9ஆம் தேதி வரை அவரை அமலாக்கத்துறை காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது..
இந்நிலையில் தான் ஆம் ஆத்மியின் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் வீடு, அவருடைய உறவினர்கள், உதவியாளர்கள் இல்லங்களில் நேற்றைய தினம் ஒரு நாள் முழுவதும் அமலாக்கத் துறையினர் 3 குழுக்களாக பிரிந்து தொடர் சோதனையில் ஈடுபட்டனர்.. இந்த சோதனையின் முடிவில் ஒட்டுமொத்தமாக நேற்றைய தினம் மட்டும் 2.82 கோடி ரூபாய், 133 தங்க நாணயங்கள் உள்ளிட்ட 1.80 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் நடந்த இந்த சோதனையில் இவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த பணம் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.