டெல்லி கலவரம் குறித்து விவாதிக்குமாறு எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் 2வது கூட்டம் 19 நாள் இடைவெளிக்கு பின்னர் இன்று தொடங்கியது. நாடாளுமன்ற பட்ஜெட் தொடரின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி 31ம் தேதி தொடங்கி கடந்த மாதம் 11ம் தேதி முடிவடைந்தது. நாடாளுமன்றத்தின் குளிர்க்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்துக்கு (சிஏஏ) பட்ஜெட் தொடரின் முதல்கட்ட கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
மேலும் சிஏஏவுக்கு எதிரான போராட்டம் நாட்டின் பல பகுதிகளிலும் தொடர்ந்து நடந்து வந்தது.டெல்லி ஷாகீன் பாக் பகுதியில் முஸ்லிம்கள் கடந்த ஆண்டு டிசம்பர் 15-ம் தேதி தொடங்கிய சாலை மறியல் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக போராட்டம் நடைபெற்றது.
அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் கடந்த 23ம் தேதி சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்தும் கடமையில் இருந்து தவறியதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி கூறினார். மேலும் சோனியா தலைமையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்ந்தை சந்தித்து மனு அளித்தனர்.
டெல்லி கலவரத்துக்கு மத்திய அரசும், டெல்லி அரசும் பதில் அளிக்க வேண்டும் என காங்கிரஸ் செயற்குழு கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றியது. இந்நிலையில் பட்ஜெட் தொடரின் 2-வது கூட்டம் இன்று காலை தொடங்க இருந்த நிலையில் காங்கிரஸ் எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Rajya Sabha adjourned till 2 pm after uproar by opposition MPs over #DelhiViolence pic.twitter.com/Z6f0Y53Ek6
— ANI (@ANI) March 2, 2020
இதனை தொடர்ந்து மக்களவையில் 2வது கூட்டம் தொடங்கிய நிலையில், கூட்டத்தொடரில் டெல்லி கலவரம் பற்றி உடனே விவாதிக்குமாறு குலாம் நபி ஆசாத் வலியுறுத்தினார். இதனைத்தொடர்ந்து நிலைமை சீரானவுடன் விவாதிக்கலாம் என்று மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு கருத்து தெரிவித்தார். பின்னர் அமைச்சருடன் பேசி விவாதத்துக்கான தேதியை கூறுவதாக வெங்கையா நாயுடு பதில் கூறி மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைத்துள்ளார்.