அதிமுகவில் 4 ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை தலைமை உருவாகி உள்ளது. கடந்த ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் இடைக்கால பொது செயலாளராக பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்கள் அதே நாளில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தேர்தல் ஆணையம், நீதிமன்றம் ஆகியவற்றில் முறையீடு செய்து உள்ளார். இருப்பினும் இதுவரை நடைபெற்று சட்ட போராட்டங்களில் எடப்பாடி பழனிச்சாமி பக்கமே வெற்றி கிடைத்துள்ளது. அதிமுக ஒற்றை தலைமை விவகாரத்தில் டெல்லி பாஜக மேலிடம் மவுனம் காத்து வருகிறது.
இதற்கிடையில் சமீபத்தில் தமிழகத்திற்கு வந்த பிரதமர் மோடியை மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வரவேற்றனர். அப்போது இருவரையும் சேர்ந்து வரும்படி பிரதமர் மோடி அறிவுறுத்தியதாக கூறப்பட்டது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து பிரதமர் மோடி புறப்பட்டபோது ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி அருகருகே நின்று வழி அனுப்பினார். அப்போது இருவரும் கொடுத்த பூங்கொத்தை பிரதமர் மோடி ஒன்றாக சேர்த்து வாங்கினார். இதனையடுத்து சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு அரை மணி நேரத்திற்கு மேல் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
அப்போது நாடாளுமன்ற மக்களவை தேர்தல் உள்ளிட்ட விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீடு விவாகரத்தில் தமிழக அரசு மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ஆகியோரது ஆசி ஓ.பன்னீர்செல்வத்திற்கு கிடைத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறேன். இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.