சுதந்திர தின விழாவையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று காலை தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
இந்திய சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் இன்று காலை சுதந்திர தின விழா நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று , மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். வழக்கமாக சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்படும். ஆனால் இந்த ஆண்டு, கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் விழா கொண்டாட உள்ளது.
விழாவில் பங்கேற்க வெளிநாட்டு தூதர்கள், உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுர்கள் என 4 ஆயிரத்துக்கும் மேட்பட்டோருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருப்பதாக ராணுவ அமைச்சகம் கூறியுள்ளது. விழாவில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க அனுமதி கிடையாது. ஆனால் தேசிய மாணவர் படையினர் கலந்து கொள்கிறார்கள். கொரோனாவிலிருந்து மீண்டவர்களில் 1,500 பேர் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. “கொரோனா வைரசை வென்ற வெற்றியாளர்கள்” என்ற அடிப்படையில் குடிமக்களின் உறுதியை வெளிப்படுத்தும் அடையாளமாக இவர்கள் சுதந்திர தின விழாவில் பங்கேற்கிறார்கள்” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விழாவில் பங்கேற்கும் அனைவரும் முக கவசம் அணிந்து வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கையை சுத்தப்படுத்திக் கொள்ள விழா நடைபெறும் பகுதியில் ஆங்காங்கே கிருமி நாசினி திரவம் வைக்கப்பட்டு உள்ளது. உடல் வெப்ப பரிசோதனை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றும் வகையில் இருக்கைகள் போடப்பட்டு உள்ளன. 4 இடங்களில் மருத்துவ குழுவினரும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். சுதந்திர தின விழாவையொட்டி செங்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் குட்டி விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது