70 தொகுதிகள் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவையில் ராமர் கோயில் அறக்கட்டளை குழுவை அறிவித்தார். 15 பேர் கொண்ட அந்தக் குழு தன்னாட்சி அதிகாரத்தில் இயங்கும்படி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் கண்டன தலையங்கம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், “ராமர் கோயில் விவகாரம் அரசியலாகும் என்று நாங்கள் ஒருபோதும் நினைத்ததில்லை. தேர்தலுக்கு நான்கு நாள்கள் முன்பாக, ஜெய் ஸ்ரீ ராம் என முழங்கியுள்ளீர்கள். பரவாயில்லை.. அந்த ஸ்ரீ ராமனின் அருளால் உங்களுக்கு கூடுதலாக இரண்டு அல்லது நான்கு சீட்டுகள் கிடைக்கட்டும்” என கூறப்பட்டுள்ளது.
மேலும் அயோத்தியில் ராமர் கோயில் அமைக்க அனுமதி வழங்கிய உச்ச நீதிமன்றத்துக்கு சிவசேனா நன்றி தெரிவித்துள்ளது. ராமர் கோயில் கட்ட வேண்டி பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி 1990ஆம் ஆண்டில் தலைமையேற்று நடத்திய ரத யாத்திரை அதில் சிவசேனாவின் பங்கு ஆகியவை குறித்து அந்த தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.டெல்லி தேர்தல் பரப்புரை இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. தேர்தல் முடிவுகள் 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. அன்றைய தினம் மதியம் ஒரு மணிக்குள் பெரும்பான்மை முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.