டெல்லி சட்டப்பேரவைக்கு வருகிற 8ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அங்கு ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இன்று மாலை ஐந்து மணிக்குள் தேர்தல் பரப்புரை நிறைவுபெறுகிறது.இதனிடையே காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக சத்தீஷ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக தாக்கி பேசினார்.
டெல்லி நங்கோலி பகுதியில் கல்காஜி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஷிவானி சோப்ராவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்ட அவர் கூறியதாவது:-நாட்டில் சாதாரண மக்களுக்கு எவ்வித பலனும் ஏற்படவில்லை. விவசாயிகள் தொடர்ந்து சிக்கலில் தவிக்கின்றனர். இளைஞர்களுக்கு வேலையில்லை. பணவீக்கம் உயர்ந்து காணப்படுகிறது. ஆனால் பாஜக, இதைப்பற்றி கவலைக்கொள்ளாமல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
தொடர்ச்சியாக அவர்கள் இந்து-முஸ்லிம் குறித்தே பேசுகின்றனர். கங்கை நதியை சுத்திகரிப்போம் என்றதில் அவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு என்று கூறுகின்றனர். அவர்கள் உங்களின் பெற்றோரின் விவரங்களை கேட்பார்கள். உங்களின் பெற்றோர் கல்வியறிவற்றவர்களாக இருந்தால் எந்த ஆவணத்தை கொடுப்பீர்கள். நாட்டை பிளவுப்படுத்தும் முயற்சியில் அவர்கள் இறங்கியுள்ளனர்.
இவ்வாறு பூபேஷ் பாகல் கூறினார்.
டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் பூபேஷ் பாகல் தாக்குதல் தொடுத்தார். அப்போது அவர், “சத்தீஷ்கரில் காங்கிரஸ் அரசாங்கம் ஒராண்டில் சாதித்ததை கூட, ஆம் ஆத்மி அரசாங்கம் டெல்லியில் கடந்த ஐந்தாண்டுகளில் சாதிக்கவில்லை. டெல்லி மக்களுக்கு மின்சார மானியம் உள்ளிட்ட மக்கள் நலத்திட்டங்கள் விரைவில் கிடைக்கும்” எனக் கூறினார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வருகிற 11ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது