டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் பிப்ரவரி 9ஆம் தேதி மாலையே அறிவிக்கப்பட்டது. முன்னதாக தேர்தலில் பதிவான வாக்குகள் குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
வாக்குப்பதிவு நடைபெற்று பல மணி நேரங்கள் ஆன பிறகும் அதுகுறித்த விவரங்கள் வெளியிடாமல் தேர்தல் ஆணையம் தாமதப்படுத்தியது அதிர்ச்சியளிக்கிறது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்திருந்தார்.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் டெல்லி தேர்தல் அலுவலர் ரன்பீர் சிங் நமது ஈடிவி பாரத் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், வாக்கு விழுக்காடு குறித்த விவரங்கள் தயார் செய்வதில் தேர்தல் அலுவலர்கள் மும்முரமாக இருந்தனர். வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றதால்தான் வாக்கு விழுக்காடு குறித்த விவரங்கள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது என தெரிவித்துள்ளார்.
டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி (இன்று ) வெளியாகிக் கொண்டிருக்கின்றன.