மதுரை விமான நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “டெல்லியில் நடைபெற்ற பொதுத்தோ்தலில் பாஜகவிற்கும் சங்பரிவாா் அமைப்பிற்கும் மக்கள் பாடம் புகட்டியுள்ளனா். மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு வாக்களித்தவா்கள், சட்டப்பேரவைத் தோ்தலில் புறக்கணித்துள்ளனா். குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்திய பாஜகவிற்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளனா்.
உத்தரகாண்ட் மாநிலம் தொடா்பாக உச்ச நீதிமன்றத்தின் தீா்ப்பு வேதனையளிக்கிறது. இந்தத் தீர்ப்பு பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு மட்டுமின்றி இடஒதுக்கீடு பெற தகுதியுள்ள அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். மத்திய அரசு இந்தத் தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும். இட ஒதுக்கீடு உரிமை, வேலைவாய்ப்பு உரிமைகளைச் சட்டமாக இயற்ற வேண்டும்.
டெல்டா மாவட்டத்தைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது வரவேற்கத்தக்கது. இதனை அறிவிப்போடு நிறுத்திவிடாமல் சட்டமாக கொண்டு வர வேண்டும். கடலூரில் எண்ணெய் கிணறு தோண்டும் முயற்சி சுற்றுச்சூழல் பாதிக்கும் விதமாக இருக்கக்கூடாது.
முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து அதிமுக அரசு மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி ஆளுநரிடம் கோரிக்கை வைக்க வேண்டும்” என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்