Categories
அரசியல் தேசிய செய்திகள்

‘டெல்லி தோல்விக்கு வெறுப்பு அரசியலே காரணம்’ – அமித் ஷா

பரப்புரைகளின்போது முன்வைக்கப்பட்ட வெறுக்கத்தக்க பேச்சுக்களே டெல்லி தேர்தலில் பாஜக தோல்வி அடைந்ததற்குக் காரணம் என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. கருத்துக்கணிப்புகளில் தெரிவித்தபடியே, ஆம் ஆத்மி மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது. ஆம் ஆத்மி 62 இடங்களையும் பாஜக 8 இடங்களையும் கைப்பற்றின.

இதையடுத்து, தேர்தல் தோல்விக்குக் காரணம் வெறுக்கத்தக்க பேச்சுக்களே என உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “வெறுக்கத்தக்க பேச்சுக்களை முன்வைத்திருக்கக் கூடாது. இதுபோன்ற கருத்துகளைக் கட்சி அங்கீகரிப்பதில்லை. இதுபோன்ற வெறுக்கத்தக்க பேச்சுக்களே கட்சி தோல்வி அடைந்ததற்குக் காரணம். தேர்தல் குறித்து நாங்கள் தவறாகக் கணித்திருக்கலாம்.

ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவைக்கு எதிராக முடிவுகள் அமைந்துவிடவில்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து விவாதிக்க வேண்டுமானால் கட்சி அலுவலகத்திற்கு வாருங்கள். நாட்டின் பிரிவினைக்கு காங்கிரஸ் கட்சியே காரணம்” என்றார்.

Categories

Tech |