டெல்லி வன்முறையில் உயிரிழதவர்கள் எண்ணிக்கை 5ஆக உயர்ந்துள்ளது. இன்று காலையிலும் கல்வீச்சு நடந்ததால் அங்கு பதற்றம் நிலவுகிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா, கோகுல்புரி ஆகிய பகுதிகளில் நேற்று போராட்டம் நடைபெற்றது. அதே பகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாகவும் சிலர் பேரணியில் ஈடுபட்டனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் சரமாரியாக கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர்.
அப்பகுதியில் வாகனங்கள், கடைகள் மற்றும் ஒரு ஒரு பெட்ரோல் நிலையம் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இந்த வன்முறை காரணமாக ஜாஃபராபாத், மவ்ஜ்புர், பஜன்புரா பகுதிகள் போர்க்களமாக மாறின. இதனிடையே கோகுல்புரி பகுதியில் கல்வீச்சு சம்பவத்தில் படுகாயமடைந்த தலைமைக்காவலர் ரத்தன் லால் என்பவர் மருத்துவமனையில் உயிரிழந்துவிட்டார்.
இவர் ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் இந்த வன்முறையில் பொதுமக்களில் நான்கு பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 160க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறைகளை கட்டுப்படுத்துவது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதேபோல் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பிரஹம்புரி, மெளஜ்பூர் பகுதிகளில் இன்று காலையிலும் கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதனையடுத்து அப்பகுதிகளில் போலீசார், அதிவிரைவுப் படையினர் குவிக்கப்பட்டனர். அத்துடன் வன்முறைகளை கட்டுப்படுத்த அதிரவிரைவுப் படையினர் கொடி அணிவகுப்பும் நடத்தினர்.