டெல்லி வன்முறை தொடர்பாக செய்தி வெளியிடும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பான செய்திகளை வெளியிடும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் கடந்த 3 நாள் கலவரத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்தனர். 150க்கும் மேற்பட்ட மக்கள் மற்றும் காவல் துறையினர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த வன்முறையில் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் டெல்லி பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
சமூக வலைத்தளங்கள், தொலைக்காட்சிகள் என அனைத்திலும் தற்போது டெல்லி வன்முறை தொடர்பான தகவல்கள் உடனுக்குடன் வெளிவந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் டெல்லி வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக செய்திகளை அளிக்கும் போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மத ரீதியான தாக்குதலை ஏற்படுத்தும் விதத்திலோ, இரு குழுக்கள், இரு இனங்களுக்கு இடையிலான மோதல் போக்கை வளர்க்கும் உள்நோக்கம் கொண்ட செய்திகள், படங்கள், வீடியோக்களை வெளியிடுவதில் கவனம் தேவை. அவதூறான கருத்துகளைத் தாங்கியிருக்கும் செய்திகள், அரைகுறை உண்மைத் தன்மை கொண்ட செய்திகளையோ வெளியிடாமல் பார்த்து கொள்ள அறிவுறுத்தியுள்ளது. தனியார் சேட்டிலைட் தொலைக்காட்சி நிறுவனங்கள் இதனைப் பின்பற்றுமாறு டிவி சேனல்களை கேட்டுக் கொண்டிருக்கிறது.