டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, பல்கலைக்கழக வளாகத்தில், ஆசிரியர்களும், மாணவர்களும் இணைந்து, மனித சங்கிலி பேரணி நடத்தினர்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி மாலை, உருட்டுக் கட்டைகள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென புகுந்த முகமூடி அணிந்த கும்பல், மாணவர்கள் மீதும், ஆசிரியர்கள் மீதும் தாக்குதல் நடத்தியது. இந்த கொடூர தாக்குதலில், 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியரும், ஆசிரியர்களும் படுகாயமடைந்தனர்.
பல்கலைக்கழக நிர்வாக நிர்வாகத்தின் உதவியுடன், வலதுசாரி மாணவ அமைப்பான ABVP-ஐ சேர்ந்தவர்களே, இந்த தாக்குதலை நடத்தியதாக, மாணவர்கள் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் நடைபெற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
வன்முறை நிகழ்ந்து ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, பல்கலைக்கழக வளாகத்தில், மாணவர்களும், ஆசிரியர்களும், மனித சங்கிலி பேரணி நடத்தினர். ஓராண்டு ஆகியும், நீதி இன்னும் காத்திருக்கிறது, ஒரு போதும் பின் வாங்க மாட்டோம், உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி, மாணவர்களும், ஆசிரியர்களும் பேரணியில் பங்கேற்றனர்.